பங்குனி உத்திர விழா: கும்பகோணம் கோவில்களில் தீர்த்தவாரி, தெப்பம்
தஞ்சாவூர், கும்பகோணம் மகாமகம் குளத்திலும், காவிரி ஆற்றிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 5 கோவில்களில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி, ஆதிகம்பட்ட விஸ்வநாத சுவாமி, கொட்டையூர் கோடீஸ்வரர், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில்களில் கடந்த 9ம் தேதி கொடியேற்றப்பட்டு, பங்குனி உத்திர பிரம்மோத்சவ விழா 10 நாட்கள் நடந்தது. தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்துடன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. விழாவின் 10வது நாளான பெரியநாயகியம்மன் சமேத நாகேஸ்வரர் சுவாமி, அனந்தநிதியம்பிகையம்மன் சமேத கம்பட்டவிஸ்வநாதர் சுவாமியும் தனித்தனி வாகனங்களிலும் வீதியுலா சென்றனர். பின்னர் பகல் 12 மணியளவில் மகாமகம் குளக்கரையில் தீர்த்தவாரி மூர்த்தியான அஸ்திர தேவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்களும் மகாமக குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.
இதே போல் கொட்டையூரில் உள்ள பந்தாடுநாயகியம்மன் சமேத கோடீஸ்வரர் கோவில், திருபுவனத்திலுள்ள தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவிலின் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெற்றது. இதே போல் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏகதின விழா நடைபெற்றது. காலையில் தங்கமயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி வீதியுலா சென்று, காவிரியாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஏராளமானோர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.