120 வருடங்களாக வீர அழகரை சுமந்து செல்லும் குதிரை வாகனம் சீரமைப்பு
மானாமதுரை: மானாமதுரையில் சித்திரை மற்றும் ஆடி திருவிழாவின் போது வீர அழகரை சுமந்து சென்ற 120 வருடங்கள் பழமை வாய்ந்த குதிரை வாகனம் சீரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
மானாமதுரையில் உள்ள வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.திருவிழா நாட்களின் போது வீர அழகர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவது வழக்கம் இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குவார். இந்த குதிரை வாகனத்தை மானாமதுரையில் கடந்த 120 வருடங்களுக்கு முன்பு மானாமதுரை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நாகலிங்க கொத்தனார் கோயிலுக்கு உபயமாக கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது அந்தக் குதிரை வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அவரது மகன்கள் முருகானந்தம், கணேசன்,ஆறுமுகம்,நமச்சிவாயம் மற்றும் குடும்பத்தினர் தங்களது சொந்த செலவில் குதிரை வாகனத்தை சீரமைத்து அதில் சேதமடைந்து இருந்த பகுதிகளை மாற்றிவிட்டு புதுப்பொலிவோடு குதிரை வாகனத்தை மாற்றி அழகர்கோயிலில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து கோயிலில் குதிரை வாகனத்திற்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.