மாரநாட்டில் மாசி களரி திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED :1314 days ago
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கருப்பண்ணசாமி கோயில் மாசி களரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். மாரநாடு கருப்பண்ணசாமி கோயிலில் வருடம்தோறும் நடைபெறும் மாசி களரி திருவிழாவில் கோயில் முன் நடப்பட்ட 15 அடி உயர கம்பத்தில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மாலை அணிவித்து வணங்குவது வழக்கம். இந்தாண்டு காலை முதலே கருப்பண்ண சாமிக்கு விசேச அலங்காரம் செய்யப்பட்டு களரி திருவிழா தொடங்கியது. இரவு முழுவதும் விடிய விடிய பக்தர்கள் கருப்பண்ணசாமியை தரிசனம் செய்து கம்பத்தில் மாலை அணிவித்து வணங்கினர். காலையில் சிறப்பு பூஜைக்கு பின் கம்பத்தில் அணிவிக்கப்பட்ட மாலையை பக்தர்கள் பிரசாதமாக எடுத்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கருப்பண்ணசாமி திருக்கோயில் பக்தசபையினர் செய்திருந்தனர்.