உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தடை: வனத்துறையினரிடம் வாக்குவாதம்

வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தடை: வனத்துறையினரிடம் வாக்குவாதம்

தொண்டாமுத்தூர்: வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு, தடை விதித்ததால், வனத்துறையினரிடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் அனுமதி அளிப்பது வழக்கம்.

இந்தாண்டு, கடந்த பிப்.,28 முதல் பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் அனுமதி அளித்தனர். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், வெள்ளியங்கிரி மலை பாதையில், வனவிலங்குகள் இடம் பெயர்வதாலும், வெள்ளியங்கிரி கோவிலின் முக்கிய திருவிழாக்களான தமிழ் புத்தாண்டு மற்றும் சித்ரா பவுர்ணமி நிறைவடைந்துள்ளதாலும், பக்தர்கள் நலன் கருதி பக்தர்கள், மே 1 முதல் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது என, வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 ஆயிரம் பக்தர்கள் மலை ஏறினார். நேற்று காலை மலை ஏற சென்ற பக்தர்களை, மலையேற இன்று முதல் அனுமதி இல்லை எனக்கூறி வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். வழக்கமாக, மே மாதம் முடியும்வரை மலையேற அனுமதிப்பார்கள். ஆனால், இந்தாண்டு, மே மாதம் துவங்கும்போதே அனுமதி மறுக்கின்றனர் என பக்தர்கள், வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சில பக்தர்கள் வனத்துறையினரின் தடையை மீறி மலை ஏறினார். அதன்பின், பக்தர்கள் மலை ஏற அனுமதி இல்லை எனக் கூறி, கீழ் மண்டபத்திலே, பக்தர்களை வனத்துறையினர் தடுத்து அனுப்பினர். விலங்குகள் நடமாட்டம் உள்ளது, அதோடு வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது எனவே, பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !