உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உழைக்கும் கைகளே!

உழைக்கும் கைகளே!


தோழர் ஒருவர் வறுமையில் வாடி வந்தார். அடுத்த வேளை உணவுக்கே கஷ்டம் என்கிற சூழல். இந்த இடத்தில் யாராக இருந்தாலும் பிறரது உதவியை நாடி செல்வோம். அவரும் அதுபோலவே நாயகத்தை தேடி சென்றார். வந்தவரின் குடும்ப சூழலை அறிந்தவர், ‘எப்படி இவருக்கு உதவலாம்’ என சிந்திக்க ஆரம்பித்தார்.
நம்மிடம் சிலர் உதவி கேட்டு வந்தால் என்ன செய்வோம். நம்மால் என்ன முடியுமோ அதை செய்வோம் அல்லவா.. ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.  
‘‘உங்களிடம் என்ன உள்ளது’’ என தோழரிடம் கேட்டார்.
‘‘என் வீட்டில் ஒரு விரிப்பும், ஒரு குவளையும் உள்ளது’’ என அவர் கூறியதும், அதைக் கொண்டு வருமாறு கூறினார்.   
கொண்டு வந்த பொருட்களை ஏலம் விட்டார் நாயகம். அதிலிருந்து இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன. அதை தோழரிடம் கொடுத்தார். ‘அப்பாடா.. இன்றைய பொழுது நல்லபடியாக போகும்’ என நினைத்து அதை மகிழ்ச்சியாக வாங்கியதும், கிளம்ப தயாரானார் தோழர். அப்போதுதான் அவருக்கு ஒளிமயமான எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சாவி கிடைத்தது.
‘‘தோழரே.. ஒரு திர்ஹத்தை குடும்பத்தினருக்கு கொடுங்கள். மீதியுள்ள திர்ஹத்தை வைத்து கோடாரியை வாங்குங்கள். அதன்மூலம் விறகை வெட்டி அதை விற்றுவிடுங்கள். பதினைந்து நாட்கள் கழித்து என்னிடம் வாருங்கள்’’ என சொல்லி அனுப்பி வைத்தார்.
தோழரும் உழைப்பின் மூலம் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்தார். பதினைந்து நாட்கள் கழித்து நாயகத்திடம் சென்றவர், ‘‘எனது உழைப்பால் பத்து திர்ஹம்கள் சம்பாதித்தேன்’’ என்றார்.
இதைக்கேட்டு, ‘‘உழைப்பின் மூலமாக சம்பாதித்த இந்த தொகை, பிறரிடம் உதவி கேட்பதை விட மேலானது. உழைக்கும் கைகள் உயர்ந்து நிற்கும்’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !