இன்று ஆடி அமாவாசை : நிம்மதி நிலைக்க முன்னோரை வழிபடுவோம்
வானில் சூரியன் சஞ்சரிப்பதன் அடிப்படையில் ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலமாகும். இதில் கடக ராசியில் உள்ள சூரியனுடன் சந்திரன் இணையும் நாளான இன்று முன்னோரை வழிபடுவது அவசியம்.
காசி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் அன்பும் ஆசியும் நமக்கு கிடைக்கும். பெற்றோர் இறந்த தேதி, திதி மறந்தவர்கள், திதி கொடுக்க தவறியவர்கள் கூட இன்று(ஜூலை 28) திதி கொடுப்பது நல்லது.
தந்தையைக் குறிக்கும் கிரகம் சூரியன் என்பதால் பிதுர்காரகர் என்றும், தாயைக் குறிக்கும் கிரகம் சந்திரன் என்பதால் மாதுர்காரகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆண்மை, நிர்வாக ஆற்றல், வீரத்தை அளிக்க வல்லவர் சூரியன். மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகத்தை தர வல்லவர் சந்திரன். இருவரும் இணையும் இந்நாளில் வழிபட்டால் மேற்சொன்ன நல்ல பலன்கள் கிடைக்கும். தன் தந்தை தசரதருக்கும், கழுகரசனான ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்து ராமர் வழிபட்ட போது சிவபெருமான் காட்சியளித்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்ததால் முன்வினைப் பாவங்கள் விலகுவதோடு எல்லா நன்மைகளும் தேடி வரும்" என்றார்.