யோக நரசிங்கப்பெருமாள் கோயிலில் பாலாலயம்
ADDED :1037 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே யோக நரசிங்கப்பெருமாள் கோயில் பாலாலயம் நடந்தது. இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் கிராமத்தில் பழமையான யோக நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் சுவர்கள், தூண்கள் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் கிராமத்தார்கள் சார்பில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை 5:00 மணிக்கு பாலாலய விழா நடந்தது. கிராம மக்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள், பூஜகர்கள் யாகம் வளர்த்து வழிபாடு பூஜைகளை செய்து வைத்தனர். சிறப்பு அலங்காரத்தில் யோக நரசிங்க பெருமாள் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விரைவில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.