மதுரை மீனாட்சி அம்மன் பொற்றாமரைக்குளத்தில் கீழமாத்தூர் கண்மாய் மண்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, 9 இடங்களில் எடுக்கப்பட்ட பல்வகை களிமண்ணில், கீழமாத்தூர் மண் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன், இக்குளத்தில் சிமென்ட் பூசப்பட்டு, ஆழ்குழாய்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு, தொட்டியாக மாற்றப்பட்டது. தரைக்கு அடியில் தண்ணீர் ஊற வாய்ப்பில்லாமல் போனதாலும், கோயிலைச் சுற்றி பல நூறு அடிகளுக்கு ஆழ்குழாய் அமைத்ததாலும், கோயில் தூண்களில் விரிசல் ஏற்பட்டன. கும்பாபிஷேகத்தின் போது அவை சரிசெய்யப்பட்டன. மேலும், தண்ணீர் தேங்கியிருப்பதால் பாசி படர்ந்து, குளத்தின் அழகையும் கெடுத்தது. இதன்காரணமாக, சிமென்ட் தளத்தை அகற்றி, ரூ.25 லட்சம் செலவில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, கடந்த நவ.,21ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சென்னை ஐ.டி.டி., பேராசிரியர் ரவீந்திரகெட்ஜூ ஆலோசனையின் பேரில், கற்கள் அகற்றப்பட்டு, ஜியோ மெம்பரிங் தொழில்நுட்பத்தில், அதாவது குளம் முழுவதும் உலோக விரிப்பை விரித்து, அதன்மேல் 2 அடிக்கு களிமண் நிரப்பி நிரந்தர தண்ணீர் தேக்கப்படும். தாமரைகளும் வளர்க்கப்படும். இதற்காக எவ்வகை களிமண், தண்ணீரை உறிஞ்சாமல் இருக்கும், என இருமாதங்களாக ஐ.டி.டி., மற்றும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆய்வு செய்தது. இதற்காக செக்கானூரணி, கீழமாத்தூர் உட்பட 9 இடங்களில் களிமண் மாதிரிகள் சேகரிக்க பட்டன. இதில் மூன்று வகை களிமண், தண்ணீர் நிரப்ப ஏதுவானது என தியாகராஜர் பொறியியல் கல்லூரி அறிக்கை கொடுத்தது. இதில் கீழமாத்தூர் கண்மாய் மண் சிறந்தது என, ஐ.டி.டி., பேராசிரியர் ரவீந்திரகெட்ஜூ ஆய்வு செய்து அறிவித்ததை தொடர்ந்து, நேற்று முன் தினம் முதல் பொற்றாமரைகுளத்தில் மண் நிரப்பும் பணி நடந்து வருகிறது.