உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்; விமான கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருஷாபிஷேகம்; விமான கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம்

துாத்துக்குடி; அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் ஸ்வாதி நட்சத்திர நாளில் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. 


அதன்படி, ஆனி வருஷாபிஷேகம் இன்று நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தன. தொடர்ந்து மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானைக்குரிய கும்பங்களும், குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பமும், பெருமாள் சன்னதியில் பெருமாளுக்குரிய கும்பமும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டன. காலை 9:30 மணிக்கு மூலவர், வள்ளி, தெய்வானை விமானத்திற்கு போத்திகளும், சண்முக விமானத்திற்கு சிவாச்சாரியார்களும், பெருமாள் விமானத்திற்கு பட்டாச்சாரியார்களும் புனித நீரால் அபிஷேகம் செய்தனர். பின்னர் விமான கலசத்திற்கு தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் சண்முகர் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !