உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் ; பக்தர்கள் குவிந்தனர்

சென்னை கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் ; பக்தர்கள் குவிந்தனர்

சென்னை; அம்மனுக்கு உகந்த நாட்களில் ஆடிப்பூரம் திருநாளில், கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மீனாட்சி அம்மனுக்கு முற்பகல் 11:00 மணிக்கு, மஞ்சள்காப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. உச்சிகால அபிஷேக அலங்காரம் நடந்தது. சாய்ரக் ஷை பூஜையின் போது, மஞ்சள் காப்பு அலங்காரம் செய்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, 150 டஜன் வளையல்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. பின், ஆறடி உயரத்திற்கு வளையல் மாலை சார்தப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பெண் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாக வழங்கப்படுகிறது.


ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில் உள்ள ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கிருத்திகை சபை சார்பில் 108 குத்துவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.


திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில், மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு - ஊஞ்சல் சேவை நடக்கிறது.


கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தில், உற்சவ தாயார் நாச்சியார் கோலத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவையில் அருள்பாலிக்கிறார்.


திருவுடைநாதர் சமேத திருவுடைநாயகி கோவிலில், மாலை 5:30 மணிக்கு ஆடிப்பூரம் நிகழ்வு- ஊஞ்சல் சேவை, திருவிளக்கு பூஜை நடக்கின்றன.


அதேபோல, பள்ளிக்கரணை வீராத்தம்மன் கோவில், மதுரா நாராயணபரம் நாகாத்தம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளைகாப்பு விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !