செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி சங்கீத உற்சவம் நிறைவு
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு அருகே கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவிலில் சங்கீத உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது. கர்நாடக இசை மேதை, செம்பை வைத்தியநாத பாகவதரால் துவக்கப்பட்ட சங்கீத உற்சவத்தை, அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி உற்சவம் கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 8ல் சங்கீத உற்சவம் துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த சங்கீத உற்சவத்தில் இசைக் கலைஞர்களின் கச்சேரி நடந்தது. சங்கீத உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, காலை, 9:15 மணிக்கு, தியாகராஜ சுவாமிகளின் யாசகத்தை நினைவூட்டும் உஞ்சவிருத்தி பஜனை ராமச்சந்திரனின் தலைமையில் நடந்தது. அதன்பின், மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி, வெள்ளிநேழி சுப்பிரமணியன், பாபுராஜ், கங்காதேவி, பிரியா ராஜீவ் ஆகியோரின் தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடுதல் நடந்தது. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடந்தது. மாலை, 6:45 மணிக்கு பத்மேஷின் புல்லாங்குழல் கச்சேரி நடந்தது. இவருக்கு ஆற்றுகால் பாலசுப்பிரமணியன் (வயலின்), பாலக்காடு ஜெயகிருஷ்ணன் (மிருதங்கம்), ஏலம்குளம் தீபு (கடம்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். 8:15 மணிக்கு விஜய் ஜேசுதாசின் சங்கீதக் கச்சேரி நடந்தது. இவருக்கு விவேக் ராஜ (வயிலின்), ஹரி (மிருதங்கம்), கோவை சுரேஷ் (கடம்), ஹரீஷ் மேனன் (கஞ்சிரா), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். தொடர்ந்து பாதிரியார் புவுள் பூவத்திங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம் கச்சேரி, அதன்பின் 10:00க்கு அனூப், பார்வதி திலீப் ஆகியோரின் வயலின் கச்சேரி நடைபெற்றது. கோவிலில் இன்று (11ம் தேதி) நடக்கும் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.