சபரிமலையில் சித்திரை விஷு பூஜை; பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது
ADDED :193 days ago
சபரிமலை : சித்திரை விஷு நாளில் கனி தரிசனம் நடத்தி ஐயப்பனை வணங்க திரளான பக்தர்கள் சபரிமலையில் கூடினர். பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷு பூஜைகளுக்காக சபரிமலை நடை ஏப்.1ல் திறக்கப்பட்டது. ஏப்.2 முதல் 11 வரை 10 நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. 11-ம் தேதி இரவு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. ஏப்.,12- முதல் சித்திரை விஷு பூஜைகள் நடக்கின்றன. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் விஷு கனி தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கனி தரிசனம் நடத்தி ஐயப்பனை வணங்கினர். பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்கினார். ஏப்., 18 வரை சித்திரை விஷு பூஜைகள் நடக்கும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.