தீவினைகளை அழிக்கும் திரிபுர சுந்தரி
அம்பாள் அவதாரங்களில், திரிபுர சுந்தரியும் ஒன்றாகும். பண்டகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்வதற்காக, பார்வதி தேவி திரிபுர சுந்தரி அவதாரம் எடுத்து, அரக்கனை அழித்தார். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், புராதன திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. அதேபோன்று, மைசூரிலும் கூட, அற்புதமான கோவில் அமைந்துள்ளது. இதை கட்டியது ஒரு முஸ்லிம் பாளையக்காரர்.
மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தாலுகாவின், முகூரு கிராமத்தில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரையில் படுத்து மூக்கை தேய்த்து நமஸ்கரிக்க வேண்டும் என்பது, கோவிலின் ஐதீகமாகும். இதனால், நம்மிடம் உள்ள அகங்காரம் ஒழியும். இக்கோவிலுக்கு புராதன கதையும் உள்ளது.
850 ஆண்டுகள் கடந்த 850 ஆண்டுகளுக்கு முன், முஸ்லிம் பாளையக்காரர் நவாப் பாபா சாஹேப் என்பவர், வேறு ஊருக்கு சென்று போர் புரிந்துவிட்டு, திரும்பும் வழியில் முகூரு கிராமத்தின் ஆற்றங்கரையில் நாவல் மரத்தடியில் கல்லின் மீது படுத்து ஓய்வு எடுக்கிறார். தன் படைகளுக்கும் ஓய்வெடுக்கும்படி உத்தரவிடுகிறார்.
சிறிது நேரத்தில் ஒளி வந்து அவருக்கு விழிப்பு ஏற்படுகிறது. ஏதேதோ விசித்திரமான காட்சிகள் தோன்றுகின்றன. அப்போது அவர் முன் தோன்றும் திரிபுர சுந்தரி, ‘நீ என் மீது தலை வைத்து படுத்திருப்பதால், உனக்கு இது போன்று தோன்றுகிறது. கல்லில் நான் ஐக்கியமாகியுள்ளேன்’ என்றார். இதை கேட்ட முஸ்லிம் பாளையக்காரர், ‘நான் அல்லாவின் பக்தன். வேறு எந்த கடவுளையும் நம்ப மாட்டேன்’ என்கிறார்.
அது மட்டுமின்றி, அங்கிருந்த உலர்ந்து போன சோள செடியை, மண்ணில் தலை கீழாக நட்டு வைத்து, ‘இந்த செடி நாளையே துளிர்த்தால் மட்டுமே, நான் அம்பாளை நம்புவேன்’ என்றும் சவால் விடுகிறார். மறுநாள் எழுந்து வந்து பார்த்த போது, செடி வளர்ந்திருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். அம்பாளிடம் மன்னிப்பு கேட்டதுடன், தன் தவறுக்கு பரிகாரமாக அந்த இடத்தில் திரிபுர சுந்தரிக்கு கோவில் கட்டி வழிபட்டார்.
திருமணம் கைகூடும் இந்த கோவிலில் தினமும் பூஜைகள், அலங்காரங்கள் நடக்கின்றன. பவுர்ணமி, அமாவாசை, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். திரிபுர சுந்தரியை மனமுருகி வேண்டினால், தீவினைகள் அகலும். எதிரிகள் வைத்த செய்வினைகளால் அவதிப்படுவோர், இங்கு வந்து அம்பாளை தரிசனம் செய்தால், செய்வினை அகலும் என்பது ஐதீகம்.
திருமணத்துக்கு வரன் அமையாதவர்கள், திருமணமாகி, பல ஆண்டுகள் குழந்தை இல்லாத தம்பதியர், இங்கு வந்து வழிபட்டால், திருமணம் கைகூடும்; குழந்தை பிறக்கும். இதே காரணத்தால், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், திரிபுர சுந்தரி கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்து பலன் அடைகின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாதம், கோவிலில் மூன்று நாட்கள் வரை, திருவிழா நடக்கிறது.
அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இந்த திருவிழாவுக்கு திரிபுர சுந்தரியின் சகோதரிகளும் வருவதாக ஐதீகம். அருகில் உள்ள தலங்கள்: சோமநாநபுரா, தலக்காடு, சிவசமுத்ரா, மதிலேஸ்வரர் கோவில்.