பம்பையில் குவியும் ஆடைகள்: பக்தர்களுக்கு வேண்டுகோள்
சபரிமலை: என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பம்பையில் ஆடைகளை விட்டுச்செல்லும் கலாசாரம் மாறவில்லை. தினமும் டன் கணக்கில் துணிகள் குவிகிறது.
பம்பையில் குளிக்கின்ற பக்தர்கள் தாங்கள் அணிந்துள்ள ஆடைகளை கழட்டி ஆற்றிலேயே விட்டு செல்கின்றனர். இது தவறான ஐதீகம் என்று சபரிமலை தந்திரியும் திருவிதாங்கூர் தேவசம்போர்டும் பலமுறை அறிவித்தும் பக்தர்கள் கேட்பதில்லை. அரசு சார்பில் இங்கு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டும் பக்தர்கள் ஆடைகளை விடுவதை விட்டபாடில்லை. இந்த சீசனிலும் டன் கணக்கில் ஆடைகள் குவிகிறது. இதை அப்புறப்படுத்துவது சவாலாக விளங்குகிறது. துணிகளை அகற்றும் குத்தகையை எடுக்க எவரும் முன்வராத நிலையில் தமிழகத்தை சேர்ந்த சுக்கூர் பாண்டியன் என்பவர் 2.8 லட்சம் ரூபாய்க்கு குத்தகை எடுத்துள்ளார். அவர் கூறும்போது, தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் துணியை தண்ணீரில் மூழ்கி எடுக்க வேண்டும், அவர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுக்க வேண்டும், தங்குமிடம் உணவு வழங்க வேண்டும். தேவசம் போர்டுக்கும் பணம் செலுத்த வேண்டும். லாபம் கிடைக்காது என்பதால் தான் பலரும் மறுக்கின்றனர், என்றார். துணிகளை அகற்றாத பட்சத்தில் தண்ணீர் துர்நாற்றம் வீசும். பக்தர்கள் தங்கள் துணிகளை பம்பையில் வீசக்கூடாது என தேவசம்போர்டு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.