3,250 முறை நடந்து சென்று திருமலை கோவிலில் தரிசித்த 71 வயது முதியவர்
திருப்பதி: ஆந்திராவை சேர்ந்த, 71 வயது முதியவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, 3,250 முறை பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்துள்ளார்.
ஆந்திராவின் திருப்பதியை சேர்ந்தவர் வெங்கட ரமண மூர்த்தி, 71. எஸ்.பி.ஐ., வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர், ஓய்வு பெற்ற பின் வாரம் நான்கு நாட்கள் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுவரை 3,460 முறை திருமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இதில், அலிபிரி நடைபாதையில் மட்டும், 3,250 முறை பாதயாத்திரையாக சென்றுள்ளார். இந்த வழித்தடத்தில் உள்ள, 2,388 படிகளையும் ஒன்றரை மணி நேரத்தில் கடந்து சென்று தரிசனம் செய்துள்ளார். அப்போது, கோவிந்தா, கோவிந்தா என பெருமாளின் நாமத்தை உச்சரித்தபடி செல்வாராம். 71வயதிலும் ஏழுமலையானை தரிசிக்க தன்னை ஆரோக்கியமாக வைத்துள்ள இறைவனுக்கு நன்றி என்றார் வெங்கட ரமண மூர்த்தி. தள்ளாத வயதிலும் ஏழுமலையானை தரிசிக்க நடந்து செல்லும் இவரது பக்தி, பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.