நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை; தயாரிக்கும் பணி தீவிரம்
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 19ம் தேதி 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதற்கான வடைகள் தயாரிக்கும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
நாமக்கல்லில் புராதன சிறப்புப் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை நாளில், மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வருகிற 19ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்வதற்காக 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி கோயில் வளாகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வடை தயாரிக்கும்பணி துவங்கப்பட்டது. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் பட்டாச்சாரியார் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் வடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சத்து 8 வடை தயாரிப்பதற்கு 90 மூட்டை உளுத்தம் பருப்பு, 200 கிலோ நல்லெண்ணெய், 36 கிலோ சீரகம் மற்றும் மிளகு, 135 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, கோயில் செயல் அலுவலர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வசீராளன், ரமேஷ்பாபு ஆகியோர் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.