திருவோணமங்கலம் ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே திருவோணமங்கலத்தில் ஞானபுரீ சித்ரகூட சேத்ரம் ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இங்கு, 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் அனுமந்த் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை மலர்களால் சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர் சுவாமிகள், 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு விசேஷ அர்ச்சனைகள் நடந்தது. கோலாலமாக நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்தனர். பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது. மாலை 108 சுமங்கலிகளால் அனுமன் சாலிகா பாடப்பட்டது. ஆஞ்சநேயர் சன்னதியில் அர்ச்சனை செய்த ஒரு ரூபாய் நாணயம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆஞ்சநேய சுவாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருள வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வகத்தினர் செய்திருந்தனர்.