அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் 73,001 வடைமாலையில் ஆஞ்சநேயர்
கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியம் திருப்பந்தியூர் பகுதியில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 73,001 வடை மாலை சாற்றுதல் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், திருமஞ்சனமும் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு மங்கள இசையுடன் அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. காலை 9:00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, 73,001 வடை மாலை சாற்றப்பட்டது. இதில், சென்னை, ஸ்ரீபெரும்புதுார், திருப்பந்தியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
திருத்தணி திருத்தணி அடுத்த நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், வடைமாலை, வெற்றிலை மற்றும் துளசி மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கணபதி ஹோமம், லட்சார்ச்சனை நடந்தது. பின், கோவில் அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. விழாவில், கோவில் நிர்வாக குழு தலைவர் எம்.சக்கரவர்த்தி, துணை தலைவர் ஜானகி சக்கரவர்த்தி, பா.ஜ., தர்மபுரி முன்னாள் மாவட்ட செயலர் சீனிவாசன், பா.ஜ., திருவள்ளூர் மாவட்ட தலைவர் அஸ்வின் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் கருமாரியம்மன் கோவிலில், பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.