திருப்புவனத்தில் கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா துவங்கியது
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தர நாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது.
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் பத்து நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறும், தினசரி அம்மனும், சுவாமி யும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். நேற்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு ரிஷப கொடியை சுவாமி சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பிரியாவிடை தாயாருடன் புஷ்பவனேஷ்வரரும், சவுந்தரநாயகி அம்மனும் தனித்தனியே கொடி மரம் அருகே எழுந்தருளினர். கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப் பட்ட பின் காலை 9:45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பின் கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப் பட்டது. மார்ச் 30ம் தேதி திங்கள்கிழமை மதியம் 12:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 31ம் தேதி காலை எட்டு மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 2ம் தேதி உற்ஸவர்களுக்கு அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.