உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.8 லட்சத்தில் நிழற்கூரை அமைப்பு

 காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.8 லட்சத்தில் நிழற்கூரை அமைப்பு

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வெயிலில் நிற்குமிடத்திற்கு, கோவில் நிர்வாகம் சார்பில் 8 லட்சம் ரூபாய் செலவில் நகர்த்தும் வகையிலான கூரை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் 29 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிச., 8ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகூர்த்தம், அரசு விடுமுறை உள்ளிட்ட நாட்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், மூலவர் சன்னிதியில் இருந்து மூன்றாவது பிரகாரம் வரை பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வரிசையில் நிற்குமிடத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில், கூரை வசதி ஏற்படுத்தப்படவில்லை.


மூன்றாம் பிரகாரத்தில் கருங்கல் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளதால், கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தரையில் உள்ள சூடு காரணமாகவும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும் பக்தர்கள் நீண்ட நேரம் திறந்த வெளியில் நிற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். எனவே, சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நிற்குமிடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து கோவில் பிரகாரத்தில் கூரை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் கதிரவன் கூறியதாவது: கோவில் வெளிபிரகாரத்தில் வெயிலில் நிற்கும் பக்தர்களின் வசதிக்காக முதற்கட்டமாக கோவில் நிதியில் இருந்து 8 லட்சம் ரூபாய் செலவில் நகர்த்தும் வகையிலான நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக கூடுதல் நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !