உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தேவ் கோவில் விழா: நர்மதை ஆற்றில் கொட்டப்பட்ட 11,000 லிட்டர் பால்

சத்தேவ் கோவில் விழா: நர்மதை ஆற்றில் கொட்டப்பட்ட 11,000 லிட்டர் பால்

செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் சத்தேவ் பகுதியில் உள்ள கோவிலில், 21 நாட்கள் திருவிழா நடைபெற்றது..


இதன் நிறைவு நாளான நேற்று முன்தினம் ஆற்றின் துாய்மை, யாத்ரீகர்களின் நல்வாழ்வு, செழிப்பு ஆகியவற்றை வேண்டி, டேங்கர்கள் மூலம் நதிக்கரைக்கு கொண்டு வரப்பட்ட 11,000 லிட்டர் பால், பக்தர்கள் முன்னிலையில் மந்திரங்கள் முழங்க, நர்மதை ஆற்றில் கொட்டப்பட்டது. இதுதொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நம் நாட்டில் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் ஏராளமானோர் உள்ள நிலையில், பல லிட்டர் பால் வீணாக ஆற்றில் கொட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டினர். இதை தொடர்ந்து விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘மத சடங்குகளின் ஒரு பகுதியாகவே 11,000 லிட்டர் பால் நதிக்கு அர்ப்பணிக்கப்பட்டது’ என்றனர். எனினும், இது சுற்றுச்சூழலை குறிப்பாக நீர்வாழ் உயிரினங்களை பெரிதும் பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான சுபாஷ் பாண்டே கூறுகையில், “பாலில் உள்ள கொழுப்பு மற்றும் புரதங்கள் பாக்ட்ரீயாக்களால் சிதைக்கப்படும் போது, நீரில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைக்கும். “இது, மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள், கால்நடைகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதுதவிர, குடிநீருக்காக நர்மதை ஆற்றை சார்ந்திருக்கும் மக்களும் பாதிக்கப்படுவர்,” என்றார். நர்மதை ஆறு, அமர்கண்டக் பகுதியில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி 1,312 கி.மீ., பயணித்து மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை கடந்து, காம்பே வளைகுடா வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. இதன்மூலம் மூன்று மாநிலங்களின் பாசனத்திற்கு தேவையான நீரை வழங்கும் முக்கிய ஆதாரமாகவும் இது திகழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !