தஞ்சை பெரியகோவில் கோட்டை அகழி துாய்மை பணி நிறுத்தம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலை சுற்றியுள்ள கோட்டை அகழி துாய்மை பணி, இந்திய தொல்லியல்துறைக்கும், கலெக்டருக்கும் ஏற்பட்ட மோதல் போக்கால் நிறுத்தப்பட்டது.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலின் முன்புறம், பின்புறம் உள்ள அகழியில், மண்டி கிடந்த மரங்கள், முள் செடிகள், குப்பையை, துாய்மைப்படுத்தும் பணி, மாவட்ட நிர்வாகம் சார்பில், மே 16ல் துவங்கப்பட்டது. இந்நிலையில், கோட்டை அகழின் முன்புறம், கோவிலின் அழகை மறக்கும் வகையில் உள்ள மரங்களை, நேற்றுமுன்தினம் வெட்ட முயன்றபோது, தொல்லியல்துறை அதிகாரிகள் தடுத்தனர். இதனால், கலெக்டருக்கும், இந்திய தொல்லியல் துறையினருக்கும், கருத்து மோதல் ஏற்பட்டு, பணிகள் நிறுத்தப்பட்டது. இது குறித்து, எம்.பி., முரசொலி கவனத்துக்கு, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கொண்டு சென்றார். பின், எம்.பி., முரசொலி, கலெக்டர், தொல்லியல் துறை அதிகாரிகள், கோவிலின் கோட்டை சுவர் பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, “கோவிலில் பல்வேறு இடங்களில், தமிழ் கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளது. கோட்டை சுவரில், மரங்கள் வளர்ந்து கோவிலின் கோபுர அழகை மறைக்கிறது. கோபுர வாசலை கடந்து உள்ளே எப்படி காலணி பாதுகாப்பிடத்தை அமைத்தீர்கள். ‘‘இது ஹிந்து ஆகமத்துக்கு எதிரானதல்லவா. கோவிலில் வெயிலில் சூடு தாங்காமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். அதற்காக பயன்படுத்தக்கூடிய தேங்காய் நார் தரை விரிப்புகளை, ஒரே இடத்தில் குவித்து குப்பை போல் ஏன் வைத்துள்ளீர்கள்,” என, தொல்லியல் துறை அதிகாரிகளிடம், கலெக்டர் கடுமையாக பேசினார்.
எம்.பி., முரசொலியும் கேள்விகளை எழுப்பினர். இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோட்டை அகழி பகுதியில், சுத்தம் செய்யும் போது பொக்லைன் இயந்திரம் மூலம் சுண்ணாம்பு பாறையை வெட்டி சிதைத்துள்ளனர். இது கோவிலின் கட்டுமானத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். கலெக்டர், எங்கள் துறை உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பணிகளை செய்தால், கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் நாங்கள் தடுக்க மாட்டோம். தொல்லியல் துறையின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுங்கள் என எங்கள் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், நாங்கள் இரு பக்கமும் பதில் கூற முடியாமல், மன வேதனையோடு பணியாற்றி வருகிறோம்’ என்றனர்.