உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெங்களூரு வாழும் கலை ஆசிரமத்தில் துணை ஜனாதிபதி; கணபதி கோவிலில் வழிபாடு

பெங்களூரு வாழும் கலை ஆசிரமத்தில் துணை ஜனாதிபதி; கணபதி கோவிலில் வழிபாடு

பெங்களூரு,வாழும் கலை ஆசிரமத்துக்கு சென்ற துணை ஜனாதிபதி சிபிஆர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் ஆசி பெற்றார்; அங்குள்ள கணபதி கோவிலில் வழிபட்டார்.


துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று பெங்களூரில் நடைபெற்ற  வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஆசிரமன் சார்பில்  துணை ஜனாதிபதிக்கு சிறப்பு மற்றும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச மையத்தில் குருதேவைச் சந்தித்து, அவரிடம் ஆசி பெற்று, கனிவான உரையாடலை மேற்கொண்டார். மேலும் சமூக நலன் மற்றும் மேம்பாட்டிற்காக ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சேவைத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் துணை ஜனாதிபதி சிறப்புரை ஆற்றினார்.  நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெஹ்லோத், குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் உறுப்பினர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சர்வதேச வாழும் கலை மையம் கருணை,தெளிவு, மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் உலகளாவிய ஆன்மிக சக்தியாக உருவெடுத்து உள்ளது. வாழ்வது ஒரு கலையாக மாற வேண்டும்; மோதலும் நிச்சயமற்ற தன்மையும் நிறைந்த இந்த உலகில், மனிதர்கள் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்று, மனிதகுலத்திற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் பணியை, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி சிறப்பாக செய்து வருகிறார். 


பக்தி என்பது கடவுளை மட்டும் வழிபடுவது இல்லை; அது சுய உணர்வை அடையும் பாதையாக உள்ளது. பக்தி என்பது அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு. நம் குடும்பத்திற்காக நம்மையும், நமது நாட்டிற்காக மனிதகுலத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். சர்வதேச வாழும் கலை 181 நாடுகளில் மையங்களை கொண்டு உள்ளது என்பதை அறிந்து நான் வியப்பு அடைந்தேன். இந்த இயக்கம் கண்டங்கள், கலாசாரம், மொழிகள், தலைமுறைகளை கடந்து, பல மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்து உள்ளது.  அக அமைதியே புற நல்லிணக்கத்தின் அடித்தளம் என்ற, ஆழமான கருத்துடன் 45 ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச வாழும் கலை மையம் துவங்கப்படும். தியானம், சேவை, கல்வி, கிராமப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பை கொடுத்து உள்ளது. சமூகத்தை மேம்படுத்துவதில் ஆன்மிகத்திற்கும் பெரும் பங்கு உண்டு என்பதை, நிரூபித்து காட்டி உள்ளது.  இந்தியா இன்று வரலாற்றில் தனித்துவமான இடத்தில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாகரீக ஞானம், யோகா, நல்வாழ்வு, நிலைத்தன்மை மீது கவனம் செலுத்துகிறார். நாட்டின் ஆன்மிக பாரம்பரியமும், நவீன தலைமையும் இணைந்து செயல்படுவது, கருணையான உலகத்தை உருவாக்க உத்வேகம் அளிக்கிறது. ஓர் உலகத்தை ஊக்குவிக்க நவீன உலகளாவிய தலைமையும், ஆன்மிகமும் இணைவதை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. முழு உலகத்தையும் ஒரே குடும்பமாக கருதும் ஒரு பண்டைய இந்திய கருத்து தான் ‘வசுதைவ குடும்பகம்’. 


இந்த மகத்தான சிந்தனையை உலகம் முழுவதும் காண்டு செல்லும் பணியை, சர்வதேச வாழும் கலை மையம் சிறப்பாக செய்கிறது. யாரும் தங்கள் வேர்களை மறக்க கூடாது, குலதெய்வத்தை மறக்க கூடாது. தியானம், ஒருமுகப்படுத்தின் முக்கியத்துவத்தை கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜர் ஒருமுகப்படுத்தினார். உங்கள் மனம் உங்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வேறு எதுவும் மனதை கட்டுப்படுத்த கூடாது. குறிப்பாக போதை பொருள் பழக்கத்தில் சிக்குவதில் இருந்து இளைஞர்கள் விலகியே இருக்க வேண்டும். வலுவான குடும்பங்கள் தான் சமூகம், மாநிலம், நாடுகள், உலகத்தை வலுப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.


குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுகையில், "மிகவும் பரபரப்பான மற்றும் நெருக்கடியான பணி அட்டவணை இருந்தபோதிலும், நமது இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், உங்களுக்கெல்லாம் ஊக்கமளிப்பதற்காகவே நேரம் ஒதுக்கி இங்கு வருகை தந்துள்ளார். தான் 2014-ஆம் ஆண்டில், அதாவது வெகு காலத்திற்கு முன்பு, இங்கு வந்திருந்ததாக அவர் என்னிடம் தெரிவித்தார். இப்போது, ​​12 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் இந்தக் வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெஹ்லோட் நம்முடன் இணைந்துள்ளார். அவர் இங்கு ஒரு விருந்தினராக மட்டும் வரவில்லை; அவர் ஒரு பெரிதும் மதிக்கப்படும் அறிஞர் ஆவார். நீங்கள் எப்போதும் அனைவருக்கும் ஊக்கமளித்து வருகிறீர்கள்..." இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !