உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜூலையில் கன்வர் யாத்திரை டில்லி அரசு சிறப்பு ஏற்பாடு

ஜூலையில் கன்வர் யாத்திரை டில்லி அரசு சிறப்பு ஏற்பாடு

புதுடில்லி,; கன்வர் யாத்திரைக்கான வசதிகளை மேம்படுத்த, ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார். கன்வாரியர்கள் எனப்படும் சிவபக்தர்கள், கன்வர் யாத்திரை மேற்கொள்வர். ஹரித்துவார், கவுமுக், கங்கோத்ரி, சுல்தான் பஞ்ச் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று கங்கையில் புனிதநீர் சேகரத்து, காவடியின் இருபுறமும் தொங்கவிட்டு, சொந்த ஊர் திரும்புவர். ஜூலை மாதம் முழுவதும் இந்த புனித யாத்திரை நடக்கிறது. இந்நிலையில், ‘‘கன்வர் யாத்திரைக்கான வசதிகளை மேம்படுத்துவதை உறுதி செய்வதற்காக, டில்லி அரசு ஐந்து பேர் குழுவை அமைத்துள்ளது,’’ என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். 


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரவிருக்கும் காவடி யாத்திரை சுமுகமாகவும், பாதுகாப்பாகவும், ஆன்மிகத்தை வளமூட்டும் வகையிலும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, கலாச்சாரத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா தலைமையில் உயர்மட்ட குழு சீரமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். புனிதமான ஸ்ராவண மாதத்தில், சிவ பக்தர்களுக்கு கண்ணியமான மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை டில்லி அரசு உறுதி செய்யும். இதற்காக காவடி முகாம்களுக்கும் சிறப்பு உதவி வழங்கப்படும். டில்லிக்குள் நுழையும் ஒவ்வொரு காவடி யாத்திரிகரும் கவுரவ விருந்தினராக நடத்தப்படுவதையும், அவர்களுக்குச் சாத்தியமான சிறந்த வசதிகளும், சேவைகளும் வழங்கப்படுவதையும் உறுதி செய்வதே, அரசின் முதன்மை நோக்கம். பயணப் பாதை மேலாண்மை, நீர்ப்புகா கூடாரங்கள், மருத்துவ வசதிகள், தடையற்ற 24 மணி நேர மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் ஆகியவற்றில் இக்குழு கவனம் செலுத்தும். ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இக்குழு, மாவட்ட கலெக்டர்கள், டில்லி போலீஸ், பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட பிற மூத்த அதிகாரிகளுடன் விரைவில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !