ஆனித் திருவிழாவில் இன்று அக்னிசட்டி வழிபாடு
பெரியகுளம்: கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவில் முக்கிய திருவிழாவான இன்று அக்னிசட்டி வழிபாடு நடக்கிறது.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 6ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பத்து நாட்கள் திருவிழாவில், தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.
நேற்று முன்தினம் 8 ம் நாள் விழாவில் உற்ஸவர் கவுமாரியம்மன் வணிகவைசிய குல அபிவிருத்தி சங்கத்திற்கு எழுந்தருளினார். அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனனை நடந்தது. ஏற்பாடுகளை வணிகவைசியர் சங்கம் மாவட்ட தலைவர் சுந்தரவடிவேல், மண்டகபடி தாரர்கள் முத்து, பாலசுப்பிரமணி, ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அம்மன் மின்னொளி அலங்காரத்தில் வீதி உலா வந்தார். திருவிழாவில் அதிகாலையிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பு கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றினர். மாவிளக்கு, ஆயிரம் கண் பானை எடுத்து அம்மனை வழிபட்டனர்.
இன்று அக்னிசட்டி முக்கிய திருவிழாவான 10ம் நாள் இன்று ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபடுகின்றனர். டி.எஸ்.பி., நல்லு தலைமையில் 30 பெண் போலீசார் உட்பட 130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.