குமரன் குன்று கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை, குமரன் குன்றில் கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா துவங்கியது.
நேற்று காலை பிள்ளையார் பெரு வேள்வி வழிபாடு நடந்தது. மாலையில் அன்னூர் சாலையில் உள்ள, கோவில் நுழைவாயில் வளைவில் இருந்து தீர்த்த குடங்கள், முளைப்பாரிகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துவந்தனர்.
அதன் பின்பு, 108 மூலிகைகளால் முதற்கால வேள்வி பூஜை நடந்தது. பேரொளி வழிபாடு முடிந்த பின், பக்தர்களுக்கு திருநீர் வழங்கப்பட்டது. இன்று இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜையும், தெய்வத் திருமேனிகளுக்கு எண் வகை மருந்து சான்றுதலும் நடைபெற உள்ளது.
27ம் தேதி காலை,7:30 மணியிலிருந்து, 9.30 மணி வரை பரிவார் தெய்வங்களுக்கும், விமானம் மற்றும் மூலவருக்கும் புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் பழனிசாமி, அறங்காவலர் குழுத் தலைவர் செல்வகுமார், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பழனிசாமி, சரோஜினி, ராமச்சந்திரன், செயல் அலுவலர் சபரீஸ்வரி ஆகியோர் செய்து வருகின்றனர்.