பெருமாள் கோவிலை சீரமைப்பதில் தொல்லியல் துறையினர் அலட்சியம்
திருவாலங்காடு: பாகசாலை ஆதிகேசவபெருமாள் கோவிலை சீரமைப்பதில், தொல்லியல் துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக, பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றங்கரையின் தென் புறத்தில் அமைந்துள்ளது ஆதிகேசவ பெருமாள் கோவில்.
இந்த கோவில், சோழர் காலத்தில், 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இக்கோவில் பிரம்மோத்சவத்தின் போது, இங்கிருந்து கொண்டுசெல்லப்படும் பொருட்களால், திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில், பல ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் உள்ளது. பாகசாலை கிராம மக்கள் இணைந்து, திருப்பணி கமிட்டி அமைத்து, இந்த கோவிலை சீரமைக்க திட்டமிட்டனர். ஆனால், பல்வேறு காரணங்களால் அத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செய்தி வெளியானதை அடுத்து, திருவள்ளூர் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால், அதற்கு பின்னும், கோவிலை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால், ஓராண்டாக சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, பழமைவாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவிலை சீரமைக்க, தொல்லியல் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.