உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் துவங்கியது

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் துவங்கியது

தஞ்சாவூர்; கும்பகோணம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் திருக்கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தென்னக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் நின்ற கோலத்தில், ஒரே தாயாரான பூமி தேவியுடன் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார்.


பொய்கையாழ்வார், பேயாழ்வார் திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் என நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது இத்தலம். இங்கு மூலவர் பெருமாளுக்கு எப்போதும் உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. தமிழக வைணவ தலங்களில் முதன் முதலில் இங்கு மட்டுமே துலாபாரம் அமைக்கப்பட்டது என்பதும், திருமலை திருப்பதியைப் போலவே தமிழகத்தில் இந்த வைணவ தலத்தில் தான் புரட்டாசி பிரமோற்சவம் நடைபெறுகிறது. என்பது சிறப்பு. இத்தகைய பெருமைக்குரிய இந்த வைணவ தலத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா பத்து நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 


அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை உற்சவர் பெருமாளான பொன்னப்பர் பூமிதேவி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்புப் பூஜைகள் செய்து கருடாழ்வார் வரைந்த கொடியினை ஹஸ்த நட்சத்திரம், கன்னியா லக்னத்தில் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


இவ்விழாவினை முன்னிட்டு 17ம் தேதி வெள்ளி கருட வாகனத்தில் பெருமாளும், வெள்ளி ஹம்ச வாகனத்தில் தாயாரும் திருவீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து ஒன்பதாம் நாள் 22ம் தேதி ரதா ரோஹணம், விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடுகள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஹம்சன், துணை கமிஷனர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !