செங்கல்பட்டு: நடுபழநி மரகத முருகன் சிலை மீட்பு
செங்கல்பட்டு: ‘நடுபழநி’ என அழைக்கப்படும் சித்தாமூர் மரகத தண்டாயுதபாணி கோவிலில் திருடு போன மரகத முருகன் சிலையை திருடிய மூவர், அரியலுாரில் கைது செய்யப்பட்டனர். கல்குவாரி குட்டையில் பதுக்கிவைத்திருந்த சிலையையும், போலீசார் மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணை கிராமத்தில் மரகத தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்த, 2.5 அடி உயர மரகத சிலை, கடந்த 2ம் தேதி நள்ளிரவு திருடு போனது. தனிப்படை போலீசாரின் விசாரணையில், கோவிலில் இருந்த 16 கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்களை அறுத்து, திருட்டு நடந்தது தெரிய வந்தது.
மேலும், கோவிலின் பின் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர்கள் மூன்று பேர், கோவிலைச் சுற்றி அடிக்கடி வந்து செல்வது தெரிந்தது. அவர்கள், அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், 27, இளவழகன், 26, மற்றும் ஜெயபால், 20, என்பதும் தெரியவந்தது. தனிப்படை போலீசார், அரியலுாரில் மூவரையும் பிடித்து, சித்தாமூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் மரகத சிலை திருட்டில் அவர்கள் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டனர்.
‘யூ – டியூப்’ வாயிலாக பெருக்கரணை கிராமத்தில், விலை உயர்ந்த மரகத சிலை இருப்பதை அறிந்துள்ளனர். இதையடுத்து ஒருவர் நோட்டமிட, சிலையை இருவர் திருடியுள்ளனர். சிலையை, புத்துார் கிராமத்தில், நீர் நிறைந்த கைவிடப்பட்ட கல்குவாரி குட்டையில் பதுக்கி வைத்திருந்தனர். போலீசார், நேற்று காலை 11:00 மணிக்கு கல்குவாரிக்கு சென்று, திருடுபோன மரகத சிலையை மீட்டனர். பின், செய்யூர் வட்டாட்சியர் ராஜனிடம் ஒப்படைத்தனர்.