மனதின் துாய்மையான எண்ணங்களே ஆன்மாவின் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும்
கோவை: பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், ‘குழப்பத்திலிருந்து அமைதிக்கு’ என்ற பெயரில், சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சி சிங்காநல்லுார், எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளியில் நடந்தது.
பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஆன்மிகச் சொற்பொழிவாளர் சகோதரி சிவானி பேசியதாவது:
உடையை மாற்றுவது போல் மனித உடலும் மாறுகிறது. ஆனால், ஆத்மாவுக்கு அழிவில்லை. புதிய உடலில் பிரவேசிக்கும் ஆத்மா, கடந்த கால அனுபவங்கள், பதிவுகள், கர்ம வினைகளுடன் பயணிக்கிறது. இதை புரிந்து கொண்டு, பிறரை நிராகரிக்காமல் அன்பையும் நல்லாசி களையும் வழங்க வேண்டும்.
ஒவ்வொருவரும் இரவு துாங்கச் செல்லும் முன், அன்றைய நாளின் கர்ம கணக்குகளை சரிபார்த்து, பிறரை மன்னித்தும், வாழ்த்தியும் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். துாய்மையான எண்ணங்களுடன் வாழ்வதே ஆத்மாவின் பயணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி, பிரம்ம குமாரிகள் அமைப்பை சேர்ந்த ஜெயந்தி கிர்பாலனி, வீனா, கோதை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.