முழு முதற் கடவுளே... வினைகளை தீர்ப்பாயே... விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
இராமநாதபுரம்
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச விநாயகர், பஸ் ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி மற்றும் கிராமங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பால், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது.
பாரதிநகர் கற்பக விநாயகர் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சின்னத்தொண்டியில் உள்ள சித்தி விநாயகர் கோயிலிருந்து விநாயகர் சிலை தொண்டி காமாட்சி அம்மன் கோயில் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு புதுக்குடி கடலில் சிலை கரைக்கபட்டது.
* கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு கிராமத்தில் நீதிமன்றம் அருகே வேப்பமரத்தடி காட்டு விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதனை முன்னிட்டு கோட்டை முனீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் பால்குடம், அக்கினி சட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். மூலவருக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
* ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வர்த்தகன் தெரு, கரையூர், இந்திர நகர், எம்.ஆர்.டி., நகர், பெரிய பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட 30 இடத்தில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு ஹிந்து முன்னணி சார்பில், பூஜை அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் செய்தனர்.
* பரமக்குடி: பரமக்குடியில் ஹிந்து முன்னணி சார்பில் 80 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவில் பரமக்குடியில் உள்ள சிவன், முருகன் மற்றும் பெருமாள் கோயில்களில் விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. ஈஸ்வரன் கோயிலில் மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்தார்.
தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் சிறப்பு ஹோமங்கள் நடந்து அபிஷேகம் நடந்தது. ஹிந்து முன்னணி பல்வேறு பகுதிகளில் திருவிளக்கு வழிபாடு அன்னதானம் செய்தனர். இன்று மாலை 4:00 மணிக்கு விநாயகர் ஊர்வலம் நடந்து இரவு 7:00 மணிக்கு பெருமாள் கோயில் முன்பு வைகை ஆறு படுத்துறையில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விநாயகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி ஜூபிலி கிணறு வீதி ஆதிசக்தி விநாயகர் கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, காலை, 7:00 மணிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி கடைவீதி பாலகணேசர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் ஹிந்து அமைப்புகள் சார்பில்,530 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மார்க்கெட் ரோடு, சேர்மன் வீதி உள்ளிட்ட பல இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஆதிபட்டி விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியார் நகர் பால விநாயகர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது.
இதில், சுவாமியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிங்கராம்பாளையம் அன்னை அபிராமி நகர் பகுதியில் உள்ள கஜமுக விநாயகர் கோவிலில் நேற்று சுவாமிக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு பிரசாதம் படைக்கப்பட்டு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
போடி
விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் வைத்தும், அருகம்புல் மாலை அணிவித்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
போடி புதூர் சங்கர விநாயகர் கோயி லில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். குலாலர்பாளையம் விநாயகர் கோயில், அணைப்பிள்ளையார் கோயில், சந்தைப்பேட்டை விநாயகர் கோயில், அக்ரஹாரம் விநாயகர் கோயில், அமராவதி நகர் விநாயகர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். போடி பஸ்ஸ்டாண்ட் அருகே ஹிந்து முன்னணி சார்பில் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
தேனி: பெத்தாட்சி விநாயகர், சாலை பிள்ளையார் கோயில், கோவிந்தநகரம் செல்வ விநாயகர் கோயில், மெய்கண்ட இரட்டை விநாயகர் கோயில்களில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. சந்தனம், விபூதி அலங்காரங்களில் சுவாமி காட்சியளித்தார். ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி, பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப் பட்டன.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாலவிநாயகர், அரச மரத்து விநாயகர், சக்கம்பட்டி கல்கோயில், காசி விநாயகர், மேல விநாயகர், மங்கள விநாயகர், மேடை விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்து வழிபட்டனர். சீனிவாசா நகரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பா.ஜ., நகர் தலைவர் மனோஜ் குமார், ஹிந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம், வழக்கறிஞர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மூணாறு: சுப்பிரமணிய சுவாமி, சக்தி விநாயகர் ஆகிய கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. ஹிந்து முன்னணி சார்பில் 14 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சிலைகள் செப்.20ல் மூணாறுசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு சென்று கன்னியாறு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும்.ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் ரமேஷ், பொது செயலாளர் சுரேஷ், பொருளாளர் கந்தகுமார், ஒருங்கிணைப்பாளர் பாலு ஆகியோர் செய்து வருகின்றனர்
திருவள்ளூர்
ஹிந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் சிவ விஷ்ணு கோவில், தீர்த்தீஸ்வரர் கோவில் மற்றும் வீரராகவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆரத்தி நடைபெற்றது.
திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில், சர்க்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, அருகம்புல், பொரி மற்றும் பழ வகைகள் படைத்து வழிபாடு செய்யப்பட்டது.
சில கோவில்களில், பக்தர்களுக்கு அன்னதானம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், சுண்டல், கேசரி போன்ற பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில், சக்தி விநாயகருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின், சிறப்பு பழங்கள் அலங்காரத்தில், சக்தி விநாயகர் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல், வெங்கத்துார்கண்டிகை வலம்புரி விநாயகர், கசவநல்லாத்துார் வரசித்தி கல்வி விநாயகர், கடம்பத்துார் சித்தி புத்தி விநாயகர், பெரியகுப்பம் லட்சுமி விநாயகர் கோவில் உட்பட, அனைத்து விநாயகர் கோவில்களிலும், மகா தீபாராதனை நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடம்பத்துார், மப்பேடு, வெள்ளவேடு, மணவாள நகர், திருவள்ளூர் தாலுகா, நகரம், செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம் ஆகிய காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில், நேற்று 190 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. அனைத்து சிலைகளும், அருகில் உள்ள நீர்நிலைகளில், வரும் 16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கரைக்கப்படும் என, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது.
பொன்னேரி என்.ஜி.ஓ., நகர் பாலவிநாயகர், திருவேங்கிடபுரம் செல்வ விநாயகர், வேண்பாக்கம் வரசித்தி விநாயகர், திருவாயற்பாடி குளக்கரை விநாயகர் கோவிகளில் சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனைகள் நடைபெற்றன.
2 செ.மீ., விநாயகர் சிலை தந்தை – மகள் அசத்தல்: திருமழிசை பேரூராட்சி பகுதியைச் சேர் ந்தவர் டி.கே.பரணி, 57. தேசிய விருது பெற்ற நுண் சிற்பக்கலைஞரான இவர், சந்தன மரம், அரிசி மற்றும் சோப்பு கல் மூலம் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட தரம் வாய்ந்த சிற்பங்களை உருவாக்கியவர். இவர், தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய, 2 செ.மீ., உயரமுள்ள சந்தனக் கட்டையில், ‘குழலுாதும் கணபதி’ சிலையை உருவாக்கியுள்ளார். அதன் கீழ் 4 எலிகள் அமர்ந்து, தம்புரா, வயலின், ஜால்ரா, மத்தளம் வாசிப்பது போல், ஒட்டுமொத்தமாக 10 செ.மீ., உயரம், 4 செ.மீ., அகலத்தில் சிலையை வடிவமைத்துள்ளார். இதேபோல், எம்.பி.ஏ., பட்டதாரியான இவரது மகள் திவ்யா, 26, தந்தையிடமிருந்து நுண் சிற்பக் கலையை கற்று, 4 செ.மீ., உயரம், அகலத்தில் தர்பார் கணபதியை, சந்தன மரக்கட்டையில் செய்து அசத்தி உள்ளார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், 36ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நடந்தது. காந்தி ரோடு செல்வ விநாயகர் கோவிலில், விநாயகர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சதுர்த்தி விழா சிறப்பு கொண்டாடப்பட்டது.
ரங்கசாமி குளம் பகுதியில் விநாயகர் திருமேனி விசர்ஜன ஊர்வலம் நடத்த நாளை இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து முடிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னிதி தெரு, ஏலேல சிங்க விநாயகர் கோவிலில், 25ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில், மூலவர் ஏலேல சிங்க விநாயகருக்கு, 25 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்; காலண்டார் தெருவில் சந்தான கணபதி; பஞ்சுகொட்டி தெரு செல்வ விநாயகர் ஆகிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம், காமராஜர் வீதி, காந்தி சாலை, கலெக்டர் அலுவலகம் பகுதிகளில் விநாயகர் சிலைகள், பூக்கள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
கோவிந்தவாடி கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளினார்.
வாலாஜாபாத் வாலாஜாபாத் பாலாஜி நகரில், வரசக்தி விநாயகருக்கு மலர் அலங்காரமும், ஏனாத்துார் காஞ்சி காமகோடி பீட யானைகள் பராமரிப்பு மையத்தில், சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய யானைகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் மற்றும் மடத்தின் நிர்வாகிகள், பாகன்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே, 10 அடி உயரத்தில் வீர தர்பார் விநாயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ராஜகணபதி சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ஒரகடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் 18 இடங்களிலும், ஸ்ரீபெரும்புதுாரில் 44 இடங்களிகளிலும், சுங்குவார்சத்திரத்தில் 38 இடங்கள் என, மொத்தம் 100 இடங்களில் நேற்று விநாயகர் சிலை வைக்கப்பட்டு சதுர்த்தி விழா விமரிசையாக நடந்தது.
குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி கிராமத்தில், லட்சுமி, சரஸ்வதி இருப்புறமும் உள்ள சிம்ம விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சதுார்த்தி விழா கொண்டாடப்பட்டது.
உத்திரமேரூர் உத்திரமேரூர் செங்குந்த பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செங்குந்த விநாயகர் சந்தனகாப்பு அலங்காரம்; உத்திரமேரூர் பஜார் வீதி முத்துபிள்ளையார் மலர் அலங்காரம்; வேடப்பாளையம் தலையாணி விநாயகருக்கு மலர் அலங்காரம்; ஆனபள்ளம் தயாளநிதி விநாயகருக்கு மலர் அலங்காரம் நடந்தன.
நெமிலி ராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூர் கிராமத்தில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ள வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கோவிலுார்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கோவிலுார் ஏரிக்கரை மூலையில் உள்ள இரட்டை விநாயகர் மற்றும் என்.ஜி.ஜி.ஓ., நகர் சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலுார் ஏரிக்கரை மூலையில் உள்ள ஜெய கணபதி, விஜய கணபதி இணைந்த இரட்டை விநாயகர் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், வெள்ளி காப்பு அலங்காரத்துடன் தீபாரத னை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரத்தில் லட்சார்ச்சனையும், இரவு 9:00 மணிக்கு உற்சவர் மூஷிக வாகனத்தில் தீபாராதனையும் வீதியுலாவும் நடந்தது.
என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர் விநாயகருக்கு மகா அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து வெள்ளிக் கவச அலங்காரத்திலும் சுவாமி அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.
திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள பெரியானை கணபதிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜை, கடம் புறப்பாடாகி சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், தீபாராதனையும் நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சங்கராபுரம் சங்கராபுரம் நகரில் 9 இடங்களில் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. கடைவீதி பிள்ளை யார் கோவில் அருகில், திரவுபதி அம்மன் கோவில் வளாகம், மீனவர் தெரு, வடக்கு தெரு, ஆற்றுப்பாதை தெரு.
பூட்டை ரோடு முருகன் கோவில் வளாகம், பொய்குனம் ரோடு விநாயகர் கோவில் அருகில், காட்டு வனஞ்சூர் பிள்ளையார் கோவில் அருகில், போஸ்ட் ஆபீஸ் தெரு என 9 இடங்களில் நேற்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தது.
திட்டக்குடி
திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், வெற்றி விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 10:00 மணியளவில் மூலவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், 10:30 மணியளவில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பகல் 11:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள வெற்றி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், 11:30 மணியளவில் அருகம்புல் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர். இதேபோல், பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் வினைதீர்த்த விநாயகர், இறையூர் தாகம் தீர்த்தப்புரீஸ்வர், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி ஆகிய கோவில்களில் உள்ள விநாயகருக்கு சதுர்த்தி வழிபாடு நடந்தது.