திருப்பதி பிரம்மோத்ஸவம் துவஜாரோஹணத்துடன் கோலாகலமாக துவங்கியது
திருப்பதி; திருமலை திருப்பதியில் பிரம்மோத்ஸவம் நேற்று செவ்வாய்கிழமை மாலை மீன லக்னத்தின் போது மாலை 6:21 மணி முதல் 6:35 மணி வரை துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) நிகழ்ச்சியுடன் பிரமாண்டமாக தொடங்கியது.
மலையப்ப சுவாமி முன்னிலையில், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், வேத முழக்கங்கள் மற்றும் மங்களகரமான இசைக் கருவிகள் முழங்க, கோயில் அர்ச்சகர்கள் கருட துவஜாவை (கருடனின் உருவம் தாங்கிய கொடி) தங்கக் கொடிமரத்தின் மீது ஏற்றினர். பிரம்மோத்ஸவங்களுக்கு அனைத்து தெய்வங்களையும், எட்டு திசைகளின் (அஷ்ட திக்பாலகர்கள்) காவலர்களையும் அழைக்கும் வகையில் இந்த சடங்கு குறிப்பிடத்தக்கது. முக்கிய நிகழ்வை முன்னிட்டு, கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக, ஸ்ரீ மலையப்ப சுவாமி (ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன்), பரிவார தேவதைகள் (உட்பார்ந்த தெய்வங்கள்) - ஸ்ரீ அனந்தன், கருடன், சக்கரத்தாழ்வார், மற்றும் சேனாதிபதி ஆகியோர் விழாக் கொடியுடன் ஊர்வலம் நடத்தப்பட்டது. விழாவில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், முத்தாதா ரவிச்சந்திரா, கங்கண பட்டர் வெங்கட ராகவ தீட்சிதுலு, குழு உறுப்பினர்கள் ஜோதுலா நேரு, பானு பிரகாஷ் ரெட்டி, பனபக லட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.