திருத்தணி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
திருத்தணி: கார்த்திகேயபுரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், திருப்பணிகள் முடிந்து, நேற்று காலை 9:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில் ஐந்து யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், முதற்கால யாகசாலை பூஜை ஆகியவை நடந்தன. தொடர்ந்து, இன்று காலை 7:30 மணிக்கு, மஹா சங்கல்பம், மஹா பூர்ணாஹுதி நடந்தது. காலை 9:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், கார்த்திகேயபுரம், திருத்தணி நகரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மகா பாரத நாடகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.