திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்; பக்தர்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர்.
அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமியன்று, பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி பவுர்ணமியை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாரதனைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து. புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 11.06 மணிக்கு துவங்கி இன்று இரவு 10.44 மணி வரை உள்ளதால் நேற்று முதல் இன்று காலை வரையில் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். இன்று காலை சுவாமி தரிசனம் செய்ய இரட்டைப் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில், நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.கிரிவலம் முடித்து சொந்த ஊருக்கு திரும்ப ரயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.