சிதம்பரம் நடராஜர் கோவிலில் புரட்டாசி மகாருத்ர மகாபிஷேகம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் புரட்டாசி மாத மகாருத்ர மகாபிஷேகம் நேற்று நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் வீற்றுள்ள மூலவர் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் மகாபிஷேகம் நடை பெறும். ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை தரிசனத்தின் போது ஆயிரங்கால் மண்டப முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், பிற மாதங்களில் மாலையில் சித்சபை வெளியே உள்ள கனகசபையில் மகாபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி மாத மகாபிஷேகம், ஆருத்ர மகாபிஷேகமாக சித்தபை முன் உள்ள கனக சபையில் நேற்று மாலை 6:30 மணிக்கு துவங்கி நடைபெற்றது. சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக காலை மகா ருத்ரயாகம் நடைபெற்றது.
அதிருத்ர மகா ஜபத்தை முன்னிட்டு, 23 ம் தேதி தட்சிணாமூர்த்தி சன்னிதியில் கூஷ்மாண்ட ஹோமம், நடராஜர் அனுக்ஞை, முக்குறுணி விநாயகர் சன்னிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடந்தது. 24 ம் தேதி நவக்கிரக சந்நிதியில் நவகிரக ஹோமும், மதுபர்க்கம், தனபூஜை, ரட்சாபந்தனம், ஆச்சார்ய வர்ணம், தன பூஜை நடந்தது. நேற்று காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஏககால லட்சார்ச்சனை, யாகசாலையில் கடஸ்தாபனம் செய்து அர்ச்னை மற்றும் அதிருத்ர ஜப பாராயணம் நடந்தது. பிற்பகல் மகா ருத்ர ஹோமம், வஸோத்தாரா ஹோமம், மகாபூர்ணா ஹூதி, மகா தீபாராதனை நடந்தது. மாலை வடுக, கன்யா,சுகாசினி, தம்பதி, கோ, கஜ பூஜைகள் நடந்தது. பின்னர், யாகசாலையில் வேதபாராயணம், தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு மகா தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு கனக சபையில் வீற்றுள்ள சிவகாமகந் தரி சமேத நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம் நடந்தது.