மகாளய அமாவாசை; ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு
திருச்சி; புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடித்து நீர்நிலைகளில் திதிகொடுப்பது வழக்கம். முன்னோர்களை வழிபாடு செய்ய உகந்ததாக கருதப்படும் தை, ஆடி மாதங்களைத் தொடர்ந்து புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தாகும். வருடம் தோறும் வரும் 12 மாத அமாவாசைகளில் திதி கொடுக்க மறந்தவர்களும், முன்னோர்களின் திதி நட்சத்திரம் தெரியாதவர்களும், தை ஆடி அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்காதவர்களும், இந்நாளில் திதிகொடுக்க மறந்தவர்களும், முன்னோர்களின் இறந்ததேதி தெரியாதவர்களும் இந்நாளில் மூதாதையர்களுக்கு திதிகொடுக்கலாம் என்பது ஐதீகம்.
அதன்படி புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி ஶ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறை அய்யாளம்மன் படித்துறை தில்லைநாயகி படித்துறை ஓடத்துறை படித்துறை ஆகிய புன்னியநதியாம் புனித காவிரி ஆற்றில் நீராடி பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர். இதில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, காரைக்குடி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலையே வருகை தந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் மற்றும் திருவாணைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர்.. காவிரியில் நீர்வரத்து உள்ளதால் பொதுமக்களின் வருகை வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்பட்டது, மேலும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது