குற்றால அருவியில் புனித நீராடி ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தென்காசி; குற்றாலத்தில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கானோர் மெயின் அருவிக்கரையில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
சாஸ்திரங்களின் படி ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த நாட்களில் கடல், நதி மற்றும் அருவிகளில் புனித நீராடி, முன்னோர்களை நினைத்து எள்ளும் நீரும் அளித்து தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆசி குடும்பத்தினருக்குக் கிடைக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில், மஹாளய அமாவாசை தினமான இன்று குற்றாலம் மெயின் அருவிக்கரையில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அங்கு தர்ப்பணம் செய்து வைப்பதற்காக வேத விற்பன்னர்களும் அதிக அளவில் வந்திருந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அருவியில் புனித நீராடி, தங்களது முன்னோர்களை நினைத்து எள் மற்றும் தண்ணீர் கொண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.. இந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவி கரையில் கடந்த சில நாட்கள் முன்னர் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அங்கு சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி மீண்டும் அமாவாசை தினத்தை முன்னிட்டு குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதால் இங்கு ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடி விட்டு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்