ஒன்பது படிகளில் ஓர் அண்டம்; இல்லங்களில் அருள் மழை: நவராத்திரி கொலு வழிபாடு துவக்கம்
திருப்பூர்: வண்ணமயமான பொம்மைகள், கொலு மேடை, பக்திப் பாடல்கள் என வீடுகள் தோறும் நவராத்திரி விழா இன்று முதல் களைகட்டத் தொடங்கியுள்ளது. புரட்டாசி அமாவாசையைத் தொடர்ந்து கொலு அமைத்து அம்பிகையை வழிபடும் மரபு தொடர்கிறது.
தாவரங்கள் தொடங்கி மனிதர்கள், முனிவர்கள், தேவர்கள் வரை படைப்பின் பல்வேறு நிலைகளைக் காட்சிப்படுத்தும் கொலு, எல்லா உயிர்களிலும் இறைவனைக் காணும் ஆன்மிகத் தத்துவத்தை உணர்த்துகிறது.
தமிழகத்தில் ஐந்து, ஏழு அல்லது ஒன்பது படிகளில் கொலு அமைப்பது வழக்கம். கிராமிய வாழ்க்கை, திருமணம், மன்னர்களின் தர்பார் எனப் பல்வேறு காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆண்டுதோறும் புதிய பொம்மைகளைச் சேர்ப்பது குடும்பத்தின் வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் மரபாகக் கருதப்படுகிறது.
திருப்பூரில் தொழில் பணிகளுக்கு இடையிலும் வீடுகளில் கொலு அமைத்து உறவினர்கள், நண்பர்களை அழைத்து வழிபடுகின்றனர். சிறுமியருக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வழங்குவதும், சுண்டல் உள்ளிட்ட படையல்களைப் பகிர்வதும் விழாவின் சிறப்பை அதிகரிக்கின்றன.
வரும் 19-ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், 20-ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகின்றன.
பக்தி, கலை, பண்பாடு, குடும்ப உறவுகளை இணைக்கும் நவராத்திரி கொலு, இல்லங்களில் இறையருளையும் ஒற்றுமையையும் போற்றும் பாரம்பரியத் திருவிழாவாகத் திகழ்கிறது.
நவராத்திரி கொலு வைப்பதற்காக விற்பனைக்கு வந்துள்ள சிவன் – பார்வதி, கிருஷ்ணர், விஷ்ணு, முருகப்பெருமான், சிவன் – பார்வதி – விநாயகர் – முருகப்பெருமான், திருவிளக்கு பூஜை, முனிவர்கள் பொம்மைகள்.