கந்த சஷ்டியை ஒட்டி திருப்புகழ் நிகழ்ச்சி பக்திகமழ பாடிய மாணவ – மாணவியர்
சென்னை: ‘ரசிக ரஞ்சனி சபா’ பவுண்டேஷன் சார்பில், கந்த சஷ்டியை ஒட்டி பள்ளி மாணவ – மாணவியர் பங்கேற்கும், ‘திருப்புகழ்’ பாடும் இசை நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபா அரங்கில் நேற்று நடந்தது. பள்ளி மாணவ, மாணவிருக்கு, இசை துறையில் ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களை ஊக்குவிக்கும் சேவையை, ரசிக ரஞ்சனி சபா மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கந்த சஷ்டியை ஒட்டி, மாணவர்களுக்கு திருப்புகழ் பாடும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஜெயலலிதா இசை பல்கலை உதவி பேராசிரியரும், இசை பயிற்சியாளருமான பவ்யா ஹரி, மாணவ – மாணவியருக்கு திருப்புகழ் பயிற்றுவித்தார். அவரிடம் கற்றுக்கொண்ட திருப்புகழை, பக்தி மணம் கமழ ஆர்.ஆர்.சபா அரங்கில், மாணவ – மாணவியர் நேற்று பாடினர். திருப்புகழுக்கே உண்டான சந்தம் மற்றும் தாளத்தில் அமைத்து பாடியதும், பள்ளி மாணவ – மாணவியரே, பக்கவாத்திய கலைஞர்களாக பங்காற்றியதும் கூடுதல் சிறப்பு. பூர்வி கல்யாணி, பிலஹரி, ஹுசேனி, பிந்து மாலினி, கல்யாண வசந்தம் உள்ளிட்ட பல ராகங்களில் அமைந்த திருப்புகழ் பாடல்களை பாடி அசத்தினர். இந்நிகழ்ச்சியில், பால வித்யா மந்திர், பி.வி.பி., ராஜாஜி வித்யாஷ்ரம், பி.எஸ்.சீனியர் மேல்நிலைப்பள்ளி, வித்யா மந்திர் உள்ளிட்ட ஆறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் திருப்புகழ் பாடல்களையும், பக்கவாத்தியமும் இசைத்தனர். இந்த நிகழ்வை பார்வையாளர்கள் பெரிதும் ரசித்தனர்.