பிரம்மோற்சவ விழா சப்பரத்தில் காமாட்சியம்மன் பவனி!
ADDED :4984 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் நேற்று சப்பரத்தில்,எழுந்தருளி நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு, உற்சவர் காமாட்சி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆறாம் நாளான நேற்று காலை காமாட்சியம்மன், சப்பரத்தில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று, அம்மனை வழிபட்டனர். இரவு கிளி வாகனம் உற்சவம் நடந்தது. ஏழாம் நாளான இன்று காலை, ரதோற்சவம் நடைபெற உள்ளது. நாளை காலை பத்ரபீடம் வாகனத்தில், 10:00 மணிக்கு எழுந்தருளுவார். இரவு குதிரை வாகன உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.