சாத்தூர் மாரியம்மன்-காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
சாத்தூர்: சாத்தூர் மாரியம்மன்-காளியம்மன் கோயிலில் நடந்த பங்குனி பொங்கல் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.சாத்தூர் மாரியம்மன்-காளியம்மன் கோயிலில் கடந்த 24 தேதி காப்புகட்டுதல், நாட்கால்நடுதலுடன் பொங்கல் விழா துவங்கியது. தினந்தோறும் பல்வேறு மண்டகப்படியார்களின் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. தினமும் இரவில் மாரியம்மன் ரிஷபம், சிம்மம், சப்பரம், குதிரை வாகனங்களில் அம்மனின் வீதியுலா நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் பொங்கல் விழா மற்றும் பூக்குழிஇறங்கும் விழா நேற்று நடந்தது. முன்னதாக இரவு 7 மணிக்கு மேல் வைப்பாற்றில் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின் இரவு 8.30 மணிக்கு மேல் பொங்கல் விழா நடந்தது. மாரியம்மன், காளியம்மன் கோயில் முன்பு குவிந்த பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கீழத்தெரு, தென்வடல்புதுத்தெரு, அண்ணாநகர், குருலிங்காபுரம், மேலக்காந்திநகர், மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து முளைப்பாரியை கொண்டு வந்து வழிபட்டனர். பலர் அக்னிசட்டி, ஆயிரங்கண் பானைகளை அம்மனுக்கு செலுத்தினர். இரவு 12.30 மணிக்கு மேல் காளியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் பூக்குழியில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.