பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு காப்புக்கட்டு
நாமக்கல்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பெரியமாரியம்மன் கோவில் திருவிழா, காப்புகட்டுடன் துவங்கியது. சேந்தமங்கத்தில், செல்லியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா, கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இக்கோவில், தர்மகர்த்தாவின் பட்டா நிலத்தில் அமைந்துள்ளதுடன், பரம்பரை கோவிலாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலில், மற்றொரு சமூகத்தினர், பூச்சாட்டு விழாவில் பங்கேற்க அனுமதிகோரி, மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக, தாசில்தார், ஆர்.டி.ஓ., தலைமையில், மூன்று கட்டமாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பாரம்பரிய வழக்கத்துக்குமாறாக புதிய முறைகள் ஏதும் வழங்காமல், பண்டிகை நடத்த வேண்டும். வேற எந்த சமூகத்தினரும், தர்மகர்த்தாவின் அனுமதியின்றி புதிய விதிமுறையை பின்பற்றக்கூடாது. தர்மகர்த்தா அனுமதி அளித்தால் மட்டுமே பூச்சாட்டு விழா நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காப்புகட்டு நிகழ்ச்சி நடந்தது. அதில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இரவு, 7 மணிக்கு, காப்பு கட்டப்பட்டது.