இதற்குத்தானே ஆசைப்பட்டாய்!
*ஒரு பெரிய நகரத்திற்கு ஆறு வழிகள் இருக்கும். அவை பல இடங்களில் இருந்து புறப்படுகின்றன. பல வகையாக வளைந்து வருகின்றன. முடிவில் அவை அந்த நகரத்தில் வந்து முடிகின்றன. அதுபோல, ஆறு சமயங்களும் பல்வேறு விஷயங்களை போதித்தாலும், இறுதியில் அவை முழுமுதற் கடவுளான முருகப்பெருமானிடமே முடிவடைகின்றன.
*சமயங்களுக்கு தலைவன் முருகனே என்பதற்கு அறிகுறியாகவே, அந்தக் குமர நாயகனுக்கு ஆறு திருமுகங்கள் விளங்குகின்றன. அந்த ஆறுமுகங்களிலும் ஈஸ்வரனுடைய ஆறு குணங்கள் இலங்குகின்றன.
*சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து முகங்களுடன் அம்பிகையின் ஒரு முகமும் சேர்ந்து எம்பெருமான் ஆறு திருமுகம் கொண்டுள்ளார்.
*சுப்பிரமணிய மூர்த்தியின் ஆறு முகங்களில் ஒரு முகம் ஓம்கார வடிவத்தை உடையது. அது இன்பத்தை தருவதாகும். மற்றொரு முகம் ஞான மொழியை மொழிகிறது. இன்னொரு முகம் சரவணபவ என்ற ஆறெழுத்தை அன்புடன் கூறி, பக்தர்களின் வினைகளை தீர்க்கிறது. ஒரு முகம் லட்சத்து ஒன்பது வீரர்களையும் மயக்கிய கிரவுஞ்ச மலையை பிளக்கும் வகையில் ஞானசக்தியை ஏவி இன்னருளை தருகிறது. ஒரு முகம் பக்தி மார்க்கத்தில் இருந்து தவறிய சூரர்களை அழித்த வீரத்தை கொண்டது. இன்னொரு முகம் மான் வயிற்றில் பிறந்த வள்ளி நாயகியின் மனம் கவர்ந்தது. இத்தனைக்கும் சொந்தக்காரனாக ஆறுமுகப்பெருமான் விளங்குகிறார்.
*நவரத்தின மாலைகளை அணிந்த மார்பைக் கொண்டவர் முருகன். மணிமகுடங்களை உடையவர். அவரது வனப்பை எடுத்துரைக்க மிகச்சிறந்த எழுத்தாளர்களாலும் முடியாது. இதனால்தான் அருணகிரிநாதர் அவரது ஆறு முகங்களையும் எழுதரிய அறுமுகமும் என்று பாடினார்.
*அழகில் சிறந்த மன்மதர்கள் ஆயிரம் கோடி பேர் ஒன்றுசேர்ந்தாலும் குமரக்கடவுளின் பாத அழகுக்குக்கூட இணை வராது. மன்மதனை தன் அழகால் முருகன் ஏளனம் புரிபவன் ஆனபடியால் அந்த பெருமானுக்கு குமரன் என்ற பெயர் ஏற்பட்டது. மன்மதனோ கரியநிறம் உடையவன். குகப்பெருமானோ செந்நிறம் உடையவர். இதனால்தான் மன்மதனை கருவேள் என்றும், குமாரப்பெருமானை செவ்வேள் என்றும் சொல்கிறார்கள்.
*‹ரபத்மனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் வேண்டிக்கொண்டனர். ஆனால், அவனை அழிக்காமல் ஆட்கொள்ள வேண்டும் என்பது பாலகுமாரனாகிய முருகப் பெருமானின் ஆசையாக இருந்தது. அந்தளவுக்கு அவர் கருணைக்கடலாக விளங்கினார்.
*முழுமதி போன்ற ஆறு முகங்களும், ஒளிவீசும் 12 மலர்விழிகளும், வைரம் பதித்த செஞ்சுருட்டி போன்ற திருவாபரணங்களும், ரத்தின குண்டலங்கள் அணிந்த 12 காதுகளும், செந்தாமரைகள் மலர்ந்தது போன்ற 12 திருக்கரங்களும், பவள மலைமேல் வெள்ளியருவி ஓடுவது போன்ற ருமேனியில் மிளிரும் முப்புரி நூலும், புகழ்பெற்ற ஆடைகளும், அரைஞாண் மணிகளும், பல வினை அகற்றும் பாதாரவிந்தங்களும் காண்ட அவனது திரு உருவத்தின் பேரழகை வர்ணிக்க வார்த்தையில்லை. கந்தசஷ்டி காலத்தில் அவன் திருப்பாதம் பணிவோம்.
-வாரியார்