250 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் சீரமைப்பு!
ADDED :4400 days ago
நாங்குநேரி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தேர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருக்குறுங்குடியில் அழகிய நம்பிராயர் கோவில் 108 புண்ணிய வைணவத் தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வார் இக் கோவிலைக் கட்டியதாக தல வரலாறு கூறுகிறது. சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தைப் பூசத் தெப்ப உற்சவமும், பத்திர தீப திருவிழாவும், பங்குனி மாதத்தில் தேர்த் திருவிழாவும் நடைபெறும். 250 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் தேரைச் சீரமைக்கும் பொருட்டு திருஜீயர் மடம் சார்பில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. பழமை வாய்ந்த தேர் புதிய பொலிவை பெற்றதால் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.