உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜராஜன் சதய விழா ஏற்பாடு தஞ்சை கலெக்டர் ஆலோசனை!

ராஜராஜன் சதய விழா ஏற்பாடு தஞ்சை கலெக்டர் ஆலோசனை!

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜன் சதயவிழா ஏற்பாடு குறித்து, தஞ்சை கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தஞ்சை கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், மாமன்னன் ராஜராஜன், 1,028வது ஆண்டு சதய விழா முன்னேற்பாடு குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சதய விழாக்குழு தலைவர் தங்கமுத்து முன்னிலை வகித்தார். மேலும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்று கருத்துக்களை கூறினர். கலெக்டர் சுப்பையன் தலைமை வகித்து பேசியதாவது: தஞ்சை பெரியகோவிலில் நவ., 10, 12ம் தேதிகளில் மாமன்னன் ராஜராஜன், 1,028வது ஆண்டு சதய விழா நடக்கிறது. இவ்விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள், நடனம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், வழக்காடு மன்றம், பட்டிமன்றம், நாட்டிய நாடகம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாமன்னன் ராஜராஜன் சிறப்புகள் குறித்து பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து விழாவுக்கு பொதுமக்கள் வர, கூடுதல் போக்குவரத்து வசதி செய்யப்படும். தீயணைப்புத்துறையினர் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கூடுதல் போலீஸாரை பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்த வேண்டும். செஞ்சிலுவை சங்கம், சுகாதாரத்துறையினர், சுகாதாரத்துறை, மின்வாரியம் உள்பட அனைத்துத்துறையினரும், விழாவுக்கு உரிய ஏற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் தஞ்சை டவுன் டி.எஸ்.பி., அர்ஜூனன், கலெக்டர் பி.ஏ., (பொது) சங்கரநாராயணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், தீயணைப்புத்துறை கோட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !