உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இமயமலையை விட உயருங்கள்!

இமயமலையை விட உயருங்கள்!

*இயற்கை நம்மிடம் சில சமயங்களில் இரக்கமற்று நடந்து கொள்கிறது. இது நம்மை நிலை குலையச் செய்கிறது. அதேநேரம், இதை கடவுளின்விளையாட்டு என நினைப்பவர்கள், இந்த நிகழ்வுகளைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
*கடவுள் மகத்தானவர் என்பது உண்மை.அதனால்தான், மனிதனின் தூற்றுதலையும், ஏளனத்தையும் கூட ஏற்றுக் கொண்டு மவுனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்.
*மரணத்தை நம்மால் வீழ்த்த முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க யாராலும் முடியாது. அதுபற்றி சிந்திப்பதை விட, வாழும் காலத்தை மேம்படுத்திக் கொள்ள முயலலாம்.
*துன்பத்திற்காக வருத்தப்பட வேண்டாம். அது முட்டாள்தனமான செயல். துன்பத்திற்குப் பின் வரவிருக்கும் நன்மையை எண்ணிப் பாருங்கள்.
*பகட்டான பேச்சை நம்பி ஏமாந்து விடக்கூடாது. ஒருபோதும், அறிவு மயங்கி விட அனுமதிக்கக் கூடாது.
*கண்களைத் திறந்துஉலகத்தைப் பாருங்கள். அப்போது இழிவானது என்று எந்த ஒரு பொருளும் உலகில் இருப்பதாகத் தெரியாது.
*வீண்பேச்சு பேசாதீர்கள். வாதம் செய்வதில் திறமை பெற்றவர்கள், தங்களுடைய தவறை உணர முடிவதில்லை. அவர்களின் திறமை, பொய்மைக்கு முகமூடி மாட்டவே முயல்கிறது.
*குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். கீழ்த்தரமான விஷயங்களைப் புறந்தள்ளுங்கள். வானத்தைக் காட்டிலும்பெரிதாக விரிவடையுங்கள்.
*இமயமலையின் சிகரத்தை விட வாழ்வில் உயர்ந்து நில்லுங்கள். ஆழ்ந்த கடலைக் காட்டிலும் ஆழம்கொண்டவராக திகழுங்கள்.
*அற்பமான உலக விஷயங்களில் மனதை அலைபாய விடாமல், தெய்வீக அன்பிலும், உலகை இயக்கும் இறைவனிடமும் திளைப்பவனே சிறந்த மனிதன்.
*கண்ணை மூடிக் கொண்டு பழைமையில் ஊறிக்கிடப்பவர்கள் கிளிப்பிள்ளைகள். இறைநம்பிக்கையுடன் வாழ்வு நடத்துபவனுக்கே நல்ல எதிர்காலம் அமையும்.
*சின்னஞ்சிறிய மலரிலும் கடவுளின் இருப்பைக் காண முடிந்தவனே,கடவுளின் பூரணத் தன்மையை அறிந்தவன்.
*தீயவர்களிடமும் நன்மை இருக்கிறது. ஒழுக்கசீலரிடமும் தீமைஇருக்கிறது. இதில்குழம்புவதற்கு ஒன்றுமில்லை. அமைதியாகச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை புரியும்.
*கடவுளின் முன்னால் நாம் அற்பப்புழு. அப்படியிருக்கும்போது, மனிதன் அகந்தையோடு செயல்படுவதற்கு என்ன இருக்கிறது?
*ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் இறைத் தன்மையை வெளிப்படுத்துங்கள். செய்யும் பணியே ஒரு வேள்வியாகட்டும். இதன் மூலம் நம் வாழ்வு சிறப்படையும்.
*மூளையைக் கொண்டு கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் இதயத்தோடு மட்டுமே பேச விரும்புகிறார்.
*அடைய வேண்டிய குறிக்கோள் வெகுதூரத்தில் இருக்கிறது. அளவுக்கு மீறி ஓய்வெடுக்க வேண்டாம். விரைந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம்இருக்கிறோம்.
*விவேகமுள்ள மிகச் சிறந்த நண்பன் கடவுள் ஒருவரே. எப்போது நம்மை அடிக்க வேண்டும், எப்போது அணைக்க வேண்டும் என்பதை அறிந்தவர் அவர் மட்டுமே.
-அரவிந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !