அக்காசுவாமிகள் கோவிலில்18ம் தேதி குருபூஜை விழா
புதுச்சேரி: வைத்திக்குப்பம் அக்காசுவாமிகள் கோவிலில் 109ம் ஆண்டு குருபூஜை விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது. வைத்திக்குப்பத்தில் அமைந்துள்ள அக்காசுவாமிகள் ஜீவ சமாதி கோவிலில், அவரது பிரதான சீடரான குரு நாராயண பரதேசி சுவாமிகளுக்கு குருபூஜை பெருவிழா, மார்கழி திருவாதிரை நாளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 109ம் ஆண்டு குருபூஜை விழா, வரும்17ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான், வெள்ளை சாற்றுப்படி அலங்காரத்தில் மாட வீதியுலா நடக்கிறது.இதையடுத்து, 18ம் தேதி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அருட்சித்தர் நாராயண சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை குரு அக்காசுவாமிகள் திருத்தொண்டு சபை செயலாளர் கிருஷ்ணன், சிறப்பு அதிகாரி செல்வம் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.