திருமலை வைகுண்ட ஏகாதசி: தர்ம தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை!
திருமலையில் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண பக்தர்களுக்கே தேவஸ்தானம் முன்னுரிமை அளிக்க உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: திருமலைக்கு நடைப்பயணமாக வரும் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி தினம் முதல் இலவச லட்டு வழங்கப்படும். இது அலிபிரி மார்க்கம் மட்டுமல்லாமல் ஸ்ரீவாரிமெட்டு மார்க்கத்தில் வரும் பக்தர்களுக்கும் பொருந்தும். அன்றைய தினம் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில் தங்கும் பக்தர்களின் வசதிக்காக மதியம் அன்னதானமும், இரவு சாம்பார் சாதம், தயிர்சாதம் வழங்குவதும் தொடங்கப்பட உள்ளது. நடைப்பயணமாக வரும், 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அன்று தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். விஐபி பிரேக் தரிசனத்தில் 6 பேர் மட்டுமே ஒரு குடும்பத்தில் அனுமதிக்கப்படுவர். விஐபி டிக்கெட் அன்று மட்டும் ரூ.1000. மேலும் அன்று பக்தர்களின் வசதிக்காக மலைபாதை 24 மணிநேரமும் திறந்திருக்கும். வி.ஐ.பி.க்கள் அதிகாலை 2 மணிக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். தர்ம தரிசன பக்தர்கள் முன்தினம் மாலை 5 மணிக்கு எம்பிசி அருகில் உள்ள வரிசையில் அனுமதிக்கப்படுவர். நடைபாதை பக்தர்கள் முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு நாராயணகிரி நந்தவனத்தில் உள்ள க்யூ வரிசையில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர்.