பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணி!
சேலம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில், 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது. சேலம் நகரில், அழகிரிநாத ஸ்வாமி பெருமாள் கோவில், சவுந்தரவல்லி, சவுந்தராஜ பெருமாள் கோவில், பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில்களில் வரும், 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. அழகிரிநாத ஸ்வாமி கோவில் பெருமாள், தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், விஷ்ணு துர்க்கை ஆகிய ஸ்வாமிகளுக்கு அன்று தங்க கவசம் சாத்தப்படுகிறது. பட்டக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை, 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு வருவர். வரும் பக்தர்கள் அனைவருக்கும், லட்டுகளை பிரசாதமாக கொடுக்க, ஆண்டாள் திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் கிலோ சர்க்கரை, 30 கிலோ முந்திரி பருப்பு, 30 கிலோ திராட்சை மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய், லவங்கம் ஆகியவற்றை கொண்டு, லட்டு தயாரிக்கும் பணியில், 40 பேர் ஈடுபட்டுள்ளனர்.