ஸ்தலசயன பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED :4302 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், நேற்று லட்சார்ச்சனை நடந்தது. 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமாக புகழ்பெற்ற இக்கோவிலில், கடந்த 2011ம் ஆண்டு, ஏக தின லட்சார்ச்சனை துவக்கப்பட்டது. நான்காவது ஆண்டாக, நேற்று காலை, உற்சவர் ஸ்தலசயனப் பெருமாள், நிலமங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, பூதத்தாழ்வார் ஆகியோருடன், மலர் அலங்காரத்தில், மகா மண்டபத்தில் எழுந்தருளினார். திருப்பாவை சேவையுடன், காலை 7:30 மணிக்கு துவங்கி, மாலை வரை லட்சார்ச்சனை நடந்தது. மாலையில் சுவாமி மற்றும் தாயார் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி, சேவை மற்றும் தீப அலங்காரம் நடந்தது. பக்தர்கள் தரிசித்து சங்கல்பம் செய்தனர். லட்டு, வடை ஆகிய பிரசாதம் வழங்கப்பட்டது. செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு உட்பட, பலர் பங்கேற்றனர்.